Blogger Widgets

ஆப்பிள் அழகி!

சுந்தரபுரம் என்ற நாட்டை அனந்தன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்கு ஐந்து மகன்கள். அவர்களுள் நான்கு பேருக்கு திருமணம் முடிந்தது. ஐந்தாவது இளவரசன் அறிவு, வீரம், அழகு எல்லாவற்றிலும் மிகவும் சிறந்து விளங்கினான். அதனால் அரசருக்கு அவன் மேல் விருப்பம் அதிகம். எங்கே அந்த மகனிடம் அரச பதவியை கொடுத்துவிடுவாரோ என பயந்தனர் மற்றவர்கள்.

இதனால் அவன் மீது பொறாமைக் கொண்ட அண்ணிகள், "ஆப்பிள் அழகி என்ற உலகிலேயே சிறந்த அழகி ஒருத்தி உண்டு. அவளை நீ மணந்து வா!'' என்று சொல்லி ஏத்தி விட்டனர்.

 "அவள் எங்கே இருக்கிறாள்?'' என்று கேட்டான் இளவரசன். "அதான் யாருக்குமே தெரியாதே!'' என்றனர் அண்ணிகள். "நான் அவளை திருமணம் செய்துக் கொண்டு தான் இங்கே வருவேன்,'' என்று சொன்னான் இளவரசன். அண்ணிகளோ, "நீ அவளை திருமணம் செய்து கொண்டு வந்தால் நாங்கள் உனது அடிமைகள்!'' என்று கூறினர்.

அதைக் கேட்ட இளவரசன் தன் வாளுடன் காட்டை நோக்கி நடந்தான். அப்போதுதான் அவன் எப்படியாவது ஒழிந்து போவான்... என நினைத்தனர். அரசரும் "உலகிலேயே யாரும் அடைய முடியாத ஆப்பிள் அழகியை மணந்து வந்தால் இந்த நாட்டுக்கு நீதான் அரசன்,' என்றார். காரணம்! ஆப்பிள் அழகி சிரித்தாலோ வைரக் கற்கள் கொட்டும். அவற்றை கொண்டு நாட்டை செழிப்பாக்கி விடலாம் என நினைத்தார் அரசர்.

அண்ணிகளோ, "இளவரசனால் ஆப்பிள் அழகியை பார்க்கவே முடியாது. ஏனெனில், அவள் எங்கே இருக்கிறாள் என்று யாருக்குமே தெரியாது! இதோடு இவன் ஒழிந்தான்!' என்று நினைத்தனர். இளவரசன் காட்டின் நடுவில் சென்று கொண்டிருந்தான். அப்பொழுது களைப்பாக இருந்ததால் ஒரு மரத்தடியில் சென்று அமர்ந்தான். அந்த மரத்தில் ஒரு பருந்து கூடு கட்டி வைத்திருந்தது. அது முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும். அது இரை தேட செல்லும் பொழுது ஒரு நாகம் தினமும் அது இடும் முட்டைகளை குடித்துவிட்டுச் செல்லும். அன்று பருந்தின் குஞ்சுகள் நான்கை கொல்லப் போனது. குஞ்சுகள் கத்துவது இளவரசன் காதில் விழுந்தது; கோபம் வந்தது. உடனே குஞ்சுகளை கொல்வதற்கு தன் வாளுடன் மேலே பார்த்தான். அங்கே பாம்பு, குஞ்சுகளை கொல்லப் போவதைப் பார்த்தான். உடனே பாம்பை கொன்று குஞ்சுகளை காப்பாற்றினான். அதைப் பார்த்து பருந்துகளின் குஞ்சுகள் மிகுந்த சந்தோஷம் அடைந்தன.

 "அண்ணே நீங்கள் யார்?'' என்று கேட்டன பருந்து குஞ்சுகள். இதைக் கேட்டதும் இளவரசன் அசந்துப் போனான். ஆப்பிள் அழகியை திருமணம் செய்யச் செல்வதாக கூறினான் இளவரசன். இதைக் கேட்ட பருந்து குஞ்சுகள், ""நாங்கள் உங்களுக்கு உதவி செய்ய முடியாது. எங்கள் அம்மா, அப்பாவால் தான் முடியும். நாங்கள் சொல்லி உதவி செய்கிறோம். நீங்கள் அந்த செடிகளில் ஒன்பதாவது செடியின் பின் சென்று ஒளிந்து கொள்ளுங்கள். நாங்கள் சொன்னால் மட்டுமே நீங்கள் வெளியே வர வேண்டும். எங்கள் அம்மா, அப்பாவிற்கு கோபம் வந்தால் உங்களையும் கொன்றுவிடுவர். அதனால்தான் சொல்லுகிறோம்,'' என்றன.

அதைக் கேட்ட இளவரசன் அவர்கள் சொன்ன இடத்திற்கு சென்று ஒளிந்துக் கொண்டான். பருந்துகள் கூட்டிற்கு வந்தன. தன் குஞ்சுகள் உயிரோடு இருப்பதையும், முட்டைகள் உடைந்து கிடப்பதையும், பாம்பு துண்டு, துண்டாக கிடப்பதையும் பார்த்து பருந்து இரண்டும் சந்தோஷத்துடன் தன் குஞ்சுகளிடம் கேட்டன.

உடனே ஒரு குஞ்சு நடந்ததை சொன்னது. ""அவன் எங்கே இருக்கிறான்?'' என்று கேட்டன.

"அம்மா நீங்கள் எங்களுக்கு பிராமிஸ் பண்ணுங்க. எங்கள் உயிரை காப்பாற்றியவருக்கு ஒரு உதவி செய்வோம் என வாக்குறுதி கொடுத்தால் நாங்கள் அவரை உங்களுக்கு காண்பிப்போம்,'' என்றன.

"சரி!'' என சொல்யதும். குஞ்சுகள் உடனே, ""அண்ணா இங்கே வாருங்கள்!'' என அழைத்தன. அதுவரை நடந்தவற்றை பொருமையாக பார்த்துக் கொண்டிருந்த இளவரசன் வெளியே வந்து பருந்துகளை வணங்கினான்.

 "உனக்கு என்ன வேண்டும் சொல்!'' என்றன. உடனே இளவரசன் அரண்மனையில் நடந்தவற்றை கூறினான். உடனே கழுகுகள் அந்த ஆப்பிள் கன்னி ஏழு மலைகளைத் தாண்டிச் சென்றால் அழகிய தங்க ஆப்பிள் தோட்டம் வரும். அதன் நடுவில் ஒரு மரம் இருக்கும். அதில் இறக்கிவிடுவேன். அந்த மரத்தை மூன்று சுற்று சுற்ற வேண்டும். முதல் சுற்றில் ஒரு கனியை பார்க்க வேண்டும், இண்டாம் சுற்று சுற்றும் பொழுது ஒரு கனியை பார்க்க வேண்டும். மூன்றாம் சுற்று சுற்றும் பொழுது ஒரு கனியை பறிக்க வேண்டும். அந்தக் கனியை அரண்மனைக்கு எடுத்து சென்று பிய்த்து பார்த்தால் அதில் ஆப்பிள் கன்னி இருப்பாள்.

 "அந்த ஆப்பிளை பறிக்கும் போது அந்த தோட்டத்தின் உரிமையாளன் கொம்பேரி பாம்பு முகத்தையுடைய பாம்பு ராட்சஷன் உன்னை கொத்த வருவான். நீ இந்த நாகக்கல்லை அவன் மீது தூக்கி எறிந்தவுடனே அவன் இறந்து போவான்,'' என்றது.
இதைக் கேட்ட இளவரசன் சரி என்றான். இளவரசன் அந்த மரத்தை பார்த்து விட்டு சுற்றத் தொடங்கினான். முதல் சுற்றில் ஒரு கனியை பார்த்தான். இரண்டாம் சுற்றில் பருந்து சொன்னது போல் பாம்பு முகத்தைக் கொண்ட ராட்சஷன் ஓடி வந்தான். நாகக்கல்லை அவன் மீது தூக்கி எறிந்தான். ராட்சஷன் "ஆ' என அலறியபடியே மடிந்து போனான். மூன்றாம் முறை மரத்தை சுற்றியதும் தங்க நிற ஆப்பிள் ஒன்று அவன் கையில் வந்து விழுந்தது. உடனே பருந்து அவனை தன் முதுகில் ஏற்றி வந்து அவனது நாட்டில் விட்டது.

மறுநாள் அரசனை வணங்கிய இளவரசன் அந்த தங்க ஆப்பிளை காண்பித்தான். அதன் அழகில் மயங்கினர். அதன் அழகில் மயங்கிய அண்ணிகள், "அது எனக்கு வேண்டும்!' என கெஞ்சினர். ஆனால், இளவரசனோ ஆப்பிளை இரண்டாகப் பிளந்தான். அதிலிருந்து தங்கச்சிலை போல் ஆப்பிள் அழகி வெளியே வந்தாள். அவள் அரசனை வணங்கி இளவரசனின் கரத்தைப் பிடித்தாள். அப்படியே அதிர்ந்தனர் அனைவரும். கலகலவென சிரித்தாள்.
வைரங்கள் கொட்டின, அசந்து போன அண்ணிகளும், அண்ணன்களும் தன் தம்பிக்கு கிடைத்த ஆப்பிள் அழகியை எண்ணி பொறாமைக் கொண்டனர். அரசன் தன் மகனுக்கு முடிசூட்டி ஆப்பிள் அழகியை அரசியாக்கி மகிழ்ந்தான். பிறகு இருவரும் சிறப்பாக நாட்டை ஆண்டனர்.

AD