Blogger Widgets

"ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு"

ஒரு கோவில் கோபுரத்தில் சில நீல நிறப் புறாக்களும் சில வெள்ளை நிறப் புறாக்களும் வாழ்ந்து வந்தன.
நீலப் புறாக்கள் தாம் வெள்ளைப் புறாக்களைவிட அழகாக இருப்பதாக எண்ணி கர்வர்த்துடன் இருந்தன.
சிலநாட்களின் பின் அக் கோபுரத்தில் திருத்த வேலகள் ஆரம்பமானது.

அதனால் எல்லாப் புறாக்களுக்கும் கோபுரத்தை விட்டு வெளியேற வேண்டி ஏற்பட்டது. புறாக்கள் எல்லாம் வேறொரு இடம் தேடி ஒரே திசையில் பறந்து சென்றன. 


அவைகள் பறந்து செல்லும் போது ஓரிடத்தில் வெய்யிலில் உலர்வதற்காக பரப்பப்பட்ட நெற்களைக் கண்டன. கண்டதும் அனைத்தும் ஒன்றாக அவ்விடத்திற்கு பறந்து சென்று காயப் போடப்பட்ட நெற்களை தின்று தீர்த்து விட்டு அருகே இருந்த ஒரு பெரிய மரம் ஒன்றில் அமர்ந்தன.
தானியத்தை காய்வதற்காக பரப்பி விட்டு சென்ற வேடன் திரும்பி வந்து பார்த்த பொழுது தானிய மணிகள் ஒன்று கூட இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தான். தானியங்கள் காயப்போட்ட இடத்தில் புறாக்களின் எச்சம் கிடப்பதை பார்த்து வேடன் என்ன நடந்தது என்பதை ஊகித்தான்.
நாளைக்கு இந்த புறாக்களை எப்படியும் வலை விரித்து பிடித்து விட வேண்டும் என்று முடிவு செய்து அதன்படி மறுநாள் வலை ஒன்றைத் தயார் செய்து அந்த இடத்தில் விரித்து தானியங்களையும் போட்டு புறாக்கள் வரும்வரை காத்திருந்தான்.
அடுத்த நாள் அங்கே வந்த புறாக்கள் தானியத்தைப் பார்த்ததும், அதை உண்ணும் ஆசையில் வேகமாக தரையிறங்கி உண்ணத் தொடங்கின. சில மணித்துளிகளில் அதன் கால்கள் வலைகளில் சிக்கிக் கொண்டன.

சற்று தொலைவில் மறைந்திருந்த வேடன் நிலைமையை நன்கு புரிந்து கொண்டு புறாக்களை பிடிக்க ஓடி வந்தான். வேடன் வருவதைப் பார்த்த புறாக்கள் ஆபத்தை உணர்ந்து கொண்டு, உயிர் மீதுள்ள ஆசையினால் எல்லாப் புறாக்களும் ஒன்றாக இறக்கையை விரித்து பறக்க ஆரம்பித்தது. வலையையும் புறாக்கள் தூக்கி கொண்டு உயரப் பறந்து சென்றன.

இதனைக் கண்ட வேடன், "அய்யய்யோ... புறாக்கள் போனாலும் பரவாயில்லை. நான் கஷ்டப்பட்டு தயாரித்த வலையும் அதோடு போகிறதே...'' என்று புலம்பிக் கொண்டே, பறந்து செல்லும் புறாக்களின் பின்னே ஓடினான்.

பறந்து செல்லும் போதே, அதில் இருந்த நீலப் புறாக்கள் கர்வத்தோடு, "எங்களது வலிமையால்தான் நீங்களும் காப்பாற்றப்பட்டு இருக்கிறீர்கள். நாங்கள் சிறகை மிக வேகமாக அடித்து பறக்கவில்லை என்றால்... அவ்வளவுதான்'' என்று கூறின. உடனே வெள்ளை நிறப் புறாக்களும் தம் பங்குக்கு, "நாங்கள்தான் வலிமையோடு பறந்தோம். உங்களுக்கு அழகு இருக்கலாம், ஆனால் ஆற்றல் கிடையாது'' என்று கூறிக் கொண்டு ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொண்டே பறந்தன. வீ ண் கர்வத்தினால் சண்டையிட்டுக் கொண்டு பறந்ததினால் அவற்றின் பறக்கும் வேகம் குறைய ஆரம்பித்தது, அதனால் அவை ஒரு மரக்கிளையில் வலையுடன் சிக்கிக் கொண்டது.

இதனைப் பார்த்த வேடனுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. "ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு" என்ற பழமொழிக் கெற்ப இப்புறாக்கள் தப்பி விடுமோ என்று பயந்தேன். நல்லவேளையாக அவற்றின் "ஒற்றுமை நீங்கியதால் அனை வருக்கும் தாழ்வு" என்ற நெறிப்படி பறந்த புறாக்களே நன்றி'' என்று புறாக்களைப் பார்த்து கூறிக் கொண்டே அவைகளை பிடித்து தனது கூடைக்குள் போடத் தொடங்கினான்.

AD